பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் கடந்த 9 ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்தார். அப்போது உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வைத்து இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
பாகிஸ்தான் ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் இம்ரான்கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன்பே, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அப்போது நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அவரை கைது செய்யும் முடிவானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்ட இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்ரான்கான் கைதுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடந்தது. இதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இம்ரான் கான் கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என்றும் அவரது ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இம்ரான்கானை ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த இம்ரான்கான் கைது செய்யப்பட்ட விதத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.