ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேஜஷ்வினி (வயது 27). பட்டம் பெற்றுள்ள இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்று அங்கு பட்ட மேற்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது தோழி அகிலா மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெண் என மூவரும் வீட்டில் தங்கி ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது படிப்பை முடித்த நிலையில் தேஜஷ்வினி அங்கு வேலைத் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் வசித்து வந்த வீட்டுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் அவரது தோழியும் வந்து தங்கி உள்ளனர். பிரேசில் இளைஞர் போதைக்கு அடிமையானவர் ஆவார். இதையடுத்து நேற்று முன்தினம் தேஜஷ்வினியும் அவரது தோழியும் சமையல் அறையில் சமைத்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென சமையல் அறையில் நுழைந்த பிரேசில் இளைஞர் தேஜேஷ்வினியிடம் பணம் கொடுக்கக் கூறி வாக்குவாதம் செய்ததுடன் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். அப்போது பிரேசில் இளைஞருக்கு பணம் தர தேஜஷ்வினி மறுத்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த பிரேசில் இளைஞர் தேஜஷ்வினியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதனைத் தடுக்க வந்த தோழி அகிலாவையும் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேஜஷ்வினி உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அகிலாவுக்கு சிகிச்சை அளிக்க அவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரேசில் இளைஞரையும் அவரது தோழியையும் கைது செய்தனர். லண்டனுக்கு படிக்கச் சென்ற ஹைதராபாத் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.