இந்தாண்டு மெக்கா ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்க உள்நாட்டினர் உள்பட 10 லட்சம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020- ஆம் ஆண்டில் உள்நாட்டைச் சேர்ந்த 1,000 யாத்திரீகர்கள் மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2021- ஆம் ஆண்டு கரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்ட உள்நாட்டைச் சேர்ந்த 60,000 பேர் வரை, குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சவுதி அரேபிய ஹஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு உள்நாட்டினர் உள்பட 10 லட்சம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வருபவர்கள், 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையின் எதிர்மறை பிசிஆர் முடிவு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.