எச் 1 பி விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடம்!
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற போது, எச் 1 பி விசாக்களின் மீது கடுமையான விதிமுறைகளை விதித்தார். இதனால், அங்கு தங்கியுள்ள பிறநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என அஞ்சப்பட்டது. இருந்தபோதிலும், எச் 1 பி விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா வழக்கம் போல் முதலிடம் வகிக்கிறது.
அமெரிக்க நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் எச் 1 பி விசாக்களுக்காக விண்ணப்பித்தவர்களின் பட்டியல் நாடு வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 1, 2016 முதல் ஜூன் 30, 2017 வரையிலான காலகட்டத்தில் எச் 1 பி விசாக்களுக்காக 2.47 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 74% என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், 2015 - 2016 காலகட்டத்தில் விண்ணப்பித்த 3 லட்சம் இந்தியர்களை விட இந்த எண்ணிக்கை சற்று குறைவுதான்.
இதில் சீனர்கள் 36,362 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த பத்தாண்டுகளில் அதிக எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடம் வகிக்கும் கனடாவில் இருந்து, 3,551 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
ஜுன் 30 வரை 3.36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1.97 லட்சம் விண்ணப்பங்களுக்கு இதுவரை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமெரிக்க குடியுரிமை மற்றும் இடம்பெயர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனாலும், மேலும் சில விண்ணப்பங்கள் ஒப்புதல்களைப் பெறலாம் எனவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்