கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப் பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போது வரை கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளை செலுத்தி போராடி வருகிறது ஒவ்வொரு நாட்டு அரசுகளும். தற்பொழுது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முதல்முறையாக நீர்யானைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெல்ஜியமில் உள்ள நீர்யானைகளுக்கு முதல்முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 'ஆன்ட் வெர்ப்' உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு நீர்யானைகளுக்கு மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் லேசாக இருந்ததால் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இரண்டு நீர்யானைகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டதால் அவை தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. நீர்யானைகளை பராமரிக்கும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.