கரீபியன் நாடுகளில் ஒன்றான கயானாவில் உள்ள மஹிடா என்ற இடத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தங்கும் வசதியுடன் கூடிய இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பள்ளியின் தங்கும் விடுதியில் திங்கட்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியின் ஒரு பக்கத்தில் தீ வேகமாகப் பரவியுள்ளது. இதனைக் கண்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வெளியேற அலறியடித்து ஓடியுள்ளனர். அதற்குள் மாணவர்கள் இருந்த அந்த அறையில் தீ பரவியுள்ளது. கடும் தீயில் சிக்கிய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.
மாணவர்கள் விடுதியில் தீப்பற்றிய சம்பவம் குறித்து அந்தப் பகுதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் விடுதியில் சிக்கிய மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய 14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தீவிர சிகிச்சையில் இருந்த 6 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் இருந்து தப்பி வெளியே வந்த மாணவி ஒருவர் கூறியதாக அந்தப் பகுதி காவல்துறையினர் தெரிவித்ததாவது; “முதலில் விடுதியின் குளியலறை பகுதியில் தீப்பற்றியது. அதனைக் கண்ட மாணவி ஒருவர் அலறினார். அதனைக் கேட்டு மற்ற மாணவ மாணவிகள் எழுந்து அங்கிருந்து தப்பி ஓடினோம். ஆனால், நாங்கள் வெளியேறும் முன் கட்டிடத்தின் அணைத்து பகுதிகளிலும் தீ மளமளவென பரவியது.”