ரஷ்யாவில் அமைந்துள்ள பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க ஜன்னல் வழியாகக் குதிக்க முயன்றபோது சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறான். கைது செய்யும்போது அந்த மாணவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் முன்னரே தனது தாக்குதல் நடத்தும் நோக்கத்தைச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதாக சில உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
#BREAKING: Shooting reported at Russian university, harrowing footage shows students jumping out of windows to escape gunman
— RT (@RT_com) September 20, 2021
More: https://t.co/gV0sv3xUdE pic.twitter.com/bZYNG177yM
மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து ஜன்னல் வழியாகக் குதிக்கும் வீடியோவை ரஷ்ய ஊடகம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம், இந்த சம்பவத்தில் இந்திய மாணவர்களுக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியத் தூதரகம், "ரஷ்யாவில் பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர தாக்குதலினால் அதிர்ச்சியடைந்தோம். உயிரிழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள். உள்ளூர் அதிகாரிகள், இந்திய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அனைத்து இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.