ஆப்கானிஸ்தானின் காபூலில் கடந்த 25 ஆம் தேதி சீக்கிய குருத்துவாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த நபர் முக்கிய பங்காற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி காபூலில் உள்ள சீக்கிய குருத்துவாரா மீது ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த மூவர் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதில் கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த தீவிரவாதி மோசினும் ஒரு நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கோரசான் மாகாணத்தைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகள் 3 பேர் கடந்த மார்ச் 25 ஆம் தேதி காபூலில் உள்ள குருத்துவாரா மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த கொடூரமான தாக்குதலில் 25 சீக்கிய பக்தர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து துரிதமாகச் செயல்பட்ட ஆப்கான் பாதுகாப்புப் படையினர் மூன்று தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். இந்த மூன்று பேரில் ஒரு தீவிரவாதி கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த மோசின் என்ற நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற மோசின், ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.