உலகின் அதிக எடையுள்ள சமோசா- கின்னஸ் சாதனை!
உலகின் அதிக எடையுள்ள சமோசா ஒன்றை லண்டனைச் சேர்ந்தவர்கள் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
ஆசிய கண்டத்தின் குறிப்பாக வட இந்தியர்களின் பிரதான உணவான சமோசா, கிட்டத்தட்ட எல்லோருக்கும் பிடித்த நொறுக்குத்தீனி. கிழக்கு லண்டனில் உள்ள மசூதி ஒன்றில் சில இஸ்லாமிய தன்னார்வலர்கள், உலகிலேயே அதிக எடையுள்ள சமோசாவினை செய்துள்ளனர்.
இந்த சமோசாவின் மொத்த எடை 153.1 கிலோகிராம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிராட்ஃபோர்டு கல்லூரியில் 110.8 கிலோ எடையில் செய்யப்பட்டது தான் சாதனையாக இருந்தது.
இந்த சமோசா கின்னஸ் சாதனையில் இடம்பெற வேண்டுமென்றால், பல விஷயங்களைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த சமோசா முக்கோண வடிவில், மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் இதர காய்கறிகள் கலந்திருக்க வேண்டும். பொறிக்கப்பட்ட பின் அதன் வடிவத்தில் எந்த மாறுதல்களும் இருக்கக்கூடாது. இது பார்ப்பதற்கு சமோசா மாதிரி இருக்க வேண்டும். மனிதர்கள் உண்ணும்படியாக இருக்க வேண்டும். முக்கியமான விஷயமே இதன் எடைதான். மேலும், சமோசா முற்றிலுமா சாப்பிடப்பட்டிருக்க வேண்டும். வீணாகியிருக்கக் கூடாது.
இதையெல்லாம் கேட்டால் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், 15 மணிநேரம் இதற்காக உழைத்தவர்கள், இந்த சாதனையை நிகழ்த்திக்காட்ட எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள். இறுதியாக நல்லவிதமாக உருவாக்கப்பட்ட இந்த சமோசா லண்டனில் வீடற்றவர்களுக்காக அனுப்பிவைக்கப்பட்டது, இந்த சாதனைக்கு முழுவடிவம் கொடுத்துள்ளது.
- ச.ப.மதிவாணன்