இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு மக்களும், இலங்கை தமிழர்களும் உணவுபொருட்கள் வாங்கவே கடும் சிரமத்தை அடைந்துவருகிறார்கள். இந்நிலையில், இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவ ஒன்றிய அரசு சட்டப்பூர்வ அனுமதியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்திற்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட டாக்டர்.எஸ்.ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட நன்றி. இந்த மனிதாபிமான நடவடிக்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும். மேலும் இரு நாடுகளுக்கு இடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை - நுவரெலியா, நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி கரங்களை நீட்டிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்களுக்கு மட்டுமின்றி அந்த உதவியை மொத்த இலங்கை மக்களுக்கும் செய்திருக்கிறார். இந்த நன்றியை என்றும் நாங்கள் மறக்கமாட்டோம். அவர் அறிவித்திருக்கும் ரூ. 80 கோடி மதிப்பிட்டில், சுமார் 40,000 டன் அரிசி, ரூ. 78 கோடியில் மருந்துகள், ரூ.15 கோடியில் பால் பவுடர் உள்ளிட்டவற்றை முன்மொழிந்திருக்கிறார். என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்” என்றிருக்கிறார்.
அதேபோல், இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருப்பதாவது; “கடந்த 29ம் தேதி நான் இந்தியா வந்திருந்தேன். அன்றைய தினம் தம்ழிநாடு சட்டமன்றத்தில் பல்வேறு உதவிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். அதிலும், அடிப்படை தேவைகளான உணவு, பால் பவுடர் மற்றும் மருந்துகளை வழங்க முன்வந்திருக்கிறார். ஆளுநராக தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை - யாழ்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரான ம.ஆ. சுமந்திரன் வெளிட்டுள்ள வீடியோவில், “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மக்களை மீட்கவும், அவர்களுக்கு உதவி செய்வதற்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக எங்களின் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.
அதிலும், நீங்கள் முன்னமே முன்வந்து இப்படியான உதவி செய்வோம் என்று அறிவித்தபோது; தயவுசெய்து தமிழ் மக்களுக்கு மட்டும் செய்யாமல் அனைத்து இலங்கை மக்களுக்கும் செய்வது இந்த நேரத்தில், பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் பணிவுடன் உங்களுக்கு சொன்னபோது, அதனை சரியான முறையில் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு, மிகமிகப் பெரிய ஒரு உதவியை நீங்கள் ஒன்றிய அரசு மூலமாக இலங்கைக்கு அனுப்பவதாக தீர்மானித்து நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானத்திற்காக எங்களின் உடன் பிறவா சகோதரரான உங்களுக்கு இதய பூர்வமான நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.