Skip to main content

ஜப்பானை அலறவிட்ட தாத்தாக்கள்; மிரளும் போலீஸ்

Published on 27/07/2024 | Edited on 27/07/2024
Grandpa gang who screamed at Japan with robbery

ஜப்பான் நாட்டையே அலறவிட்ட திருட்டு கும்பல், பலரது கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். கடந்த மே மாதம் ஹொக்கைடோவின் தலைநகரான சப்போரா பகுதியில், காலியாக இருந்த ஒரு வீட்டை உடைத்து பணம், நகை, மதுபானங்களை திருடியதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அதே பகுதியில் அடுத்த மாதம் காலியாக இருந்த மற்றொரு வீட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு போய்விட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில், தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறியதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்தனர்.

குறிப்பிட்ட இடைவெளி விட்டு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால், அந்த திருட்டு கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் தடுமாறினர். இதனையடுத்து, சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் திருடப்பட்ட பொருள்களின் மறுவிற்பனை ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து கண்காணித்து வந்தனர். அதில், அந்த திருட்டுச் சம்பவங்களை செய்தது ஒரு வயதான தாத்தாக்கள் கும்பல் என அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துள்ளது. அந்த கும்பலை போலீசார் மோப்பம் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், ஹிடியோ உமினோ (88), ஹிடெமி மட்சுடா (70) மற்றும் கெனிச்சி வதனாபே (69) ஆகிய வயதான தாத்தாக்கள் என தெரியவந்தது. மேலும், இவர்கள் மூன்று பேரும் சிறையில் சந்தித்து நண்பர்களாக மாறியிருக்கின்றனர். விடுதலையான இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒரு முறை ஒரு வீட்டில் நகை, பணம், மதுபானம் ஆகியவற்றை திருடிவிட்டு, அந்த மாதம் முழுவதும் ஜாலியாக ஊர்சுற்றி வந்துள்ளனர். வயதானவர்கள் என்பதால் போலீசாருக்கும் அவர்கள் மேல் எந்தவித சந்தேகமும் வரவில்லை எனத் தெரியவந்துள்ளது. 

சிறையில் நண்பர்களாகி விடுதலையான பிறகு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வயதான தாத்தாக்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். வயதைக் கருத்தில் கொண்டும் கூட சற்றும் கவலையில்லாமல் அவர்களின் துணிச்சலான கொள்ளை சம்பவங்களால் அவர்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்