ரஷ்யாவில் கடந்த சில ஆண்டுகளாகப் பல பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வருகிறது. அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 17 பேர் பலியாகினர். அதேபோல், 2021 ஆம் ஆண்டு மே மாதம், கசானில் உள்ள உயர்நிலை மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர். அந்த வகையில், இன்று, 14 வயது மாணவி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் எல்லைப் பகுதியில் பிரையன்ஸ்க் நகரம் உள்ளது. இந்த நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தப் பள்ளியில் படித்த 14 வயது மாணவி இன்று (07-12-23) திடீரென்று தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை வைத்து சக மாணவர்கள் மீது சரமாரியாகச் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் பலியானதோடு ஐந்து பேர் காயமடைந்தனர். அதன் பின்னர், அந்த மாணவி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்த வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அந்த மாணவிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து மாணவியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.