ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 46 வயதான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டவுன்ஸ்வில்லி என்ற இடத்தில் குடியேறி வசித்துவந்த நிலையில், சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 10.30 மணியளவில், ஒரு விபத்தில் சிக்கினார்.
சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 2004 மற்றும் 2008 க்கு இடையில் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதே போல் 1999 முதல் 11 வருட வாழ்க்கையில் 198 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டு உலகக் கோப்பை வென்ற அணிகளில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில் “இரவு 11 மணிக்குப் பிறகு, ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே, சாலையை விட்டு வெளியேறி கார் ஒன்று உருண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதில் சிக்கிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் காயங்களால் இறந்தார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஷேன் வார்ன் மற்றும் ராட் மார்ஷ் கடந்த மார்ச் மாதம் காலமான நிலையில் சைமண்ட்ஸின் மறைவு மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.