முகமது நபிகளின் கார்ட்டூன் ஒன்றை வைத்து பாடம் எடுத்ததற்காகப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகில் உள்ள பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் பொதுவெளியில் வைத்து தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அண்மையில் இவர் முகமது நபியின் கார்ட்டூன் ஒன்றை வைத்து பேச்சு சுதந்திரம் குறித்து பாடம் எடுத்துள்ளார். அப்போது வகுப்பில் இதுகுறித்த பாடம் எடுப்பதற்கு முன்பு, இஸ்லாமிய மாணவர்களின் மனதை இந்த கார்ட்டூன் புண்படுத்தலாம் என்பதால் அவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ஆனால், இந்தச் சம்பவம் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் நாட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், ஆசிரியரின் தலையைத் துண்டித்த நபரை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ள சூழலில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ஒருவர் பொதுவெளியில் வைத்து தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் மக்ரோன் தெரிவிக்கையில், இது ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல் எனக் கண்டனம் தெரிவித்ததோடு, பயங்கரவாத்திற்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் துணை நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்