சிறையில் இருந்து தப்பிப்பதற்காக தன் இரட்டைச் சகோதரரை சிக்கவைத்துவிட்டு தப்பியோடிய சிறைக்கைதி பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரு நாட்டைச் சேர்ந்த ஜெஃபர்சன் ஹெரேரா என்பவருக்கு குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சில காலம் சிறையில் இருந்த ஜெஃபர்சன் தன் இரட்டைச் சகோதரர் ஜியான்கார்லோவை சிறைக்கு அழைத்துள்ளார். கடந்த வருடம் ஜனவரி 10ஆம் தேதி சிறைக்குச் சென்ற ஜியான்கார்லோவிற்கு போதைமருந்து கொடுத்து, அவரது உடைகளை மாற்றிவிட்டு சிறையில் இருந்து ஜெஃபர்சன் தப்பித்துள்ளார்.
இதுகுறித்து ஜியான்கார்லோ சிறை நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தும், பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு ஜியான்கார்லோ கூறுவது உண்மை என அறிந்த சிறை நிர்வாகம், நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஜெஃபர்சனைக் கைதுசெய்துள்ளது.
கல்லாவோ மாவட்டத்தின் கடற்கரையில் சுற்றித்திரிந்த ஜெஃபர்சன், காவல்துறையினரைக் கண்டு ஓடியபோது மடக்கிப்பிடித்ததாக காவல்துறை நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஜெஃபர்சன் தன் தாயாரைப் பார்ப்பதற்காக சிறையில் இருந்து தப்பியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.