'ஸ்பேஸ்-எக்ஸ்' மற்றும் 'டெஸ்லா' நிறுவனங்களின் தலைவர் எலன் மஸ்க் தன் நிறுவனம் தொடர்பான ஃபேஸ்புக் பக்கங்களை நீக்கிவிட்டதாக, நேற்று (23-மார்ச்-18) அறிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்களை திருடிவிட்டதாகவும் அதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் துணை போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பில்லாதது என பல குற்றச்சாட்டுகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீதும் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் மீதும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க் தனது நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை நீக்கினார். நீக்குவதற்கு முன்னதாக ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான 'லைக்'குகள் மற்றும் பின்தொடர்பவர்கள் இருந்தனர். பேஸ்புக்கின் இந்தத் தகவல் திருட்டு புகார் பற்றி மற்றோரு சமூக ஊடகமான வாட்ஸ்-அப்பின் துணை நிறுவனர் ப்ரையன் ஆக்டமின், ''இது ஃபேஸ்புக்கை அகற்றுவதற்கான நேரம்'' (it's time to delete facebook) என்ற ட்வீட்டிற்கு ''வாட் இஸ் ஃபேஸ்புக்?" என்று ஏளனமாய் கருத்து கூறியுள்ளார் எலன் மஸ்க்.
அண்மையில் 'பெல்கான் ஹெவி' எனும் பெரிய ராக்கெட்டையும் அதனுடன் 'ஜெரி ரெட்' எனும் டெஸ்லா காரையும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பிய தனியார் நிறுவனம்தான் இவருடைய 'ஸ்பேஸ்-எக்ஸ்' நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.