மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்புக்காக சிகிச்சைபெற்று வந்த 44 வயதான பெண் ஒருவருக்கு ஆளில்லா டிரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு வரப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக 44 வயதான பெண் ஒருவர் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரின் சிறுநீரகம் செயலிழந்ததை அடுத்து அமெரிக்காவின் மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் அவருக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது.
இதனையடுத்து அறுவைசிகிச்சைக்கு முன் அவருக்கு தேவையான சிறுநீரகத்தை கொண்டு வர ஆளில்லா டிரோன் விமானம் பயன்படுத்தப்பட்டது. 5 கிலோமீட்டர் தூரத்தை 5 நிமிடங்களுக்குள் கடந்த அந்த விமானம் பத்திரமாக சிறுநீரகத்தை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்து.
இதன் மூலம் மருத்துவ உலகில் முதன்முறையாக மனித உறுப்பை டிரோன் மூலம் கொண்டு வந்து அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவமனை என்ற பெருமையை மேரிலேண்டு மருத்துவ மைய மருத்துவமனை பெற்றுள்ளது.
உறுப்புகளை கொண்டு வருவதற்காகவே மேரிலேண்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த டிரோனை வடிவமைத்துள்ளனர். கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.