அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 90 சதவீதத்திற்கு மேலாகப் பலன் அளிப்பதாக அண்மையில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தடுப்பு மருந்தானது இந்த மாதம் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது. அதன்படி, பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு டிசம்பர் 2- ஆம் தேதி பிரிட்டனும், டிசம்பர் 4- ஆம் தேதி பஹ்ரைனும் அனுமதி வழங்கின. அதேபோல கனடாவும் இந்த தடுப்பு மருந்தை தங்களது நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் நான்காவது நாடாக அமெரிக்கா சமீபத்தில் இணைந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில், அடுத்த 24 மணிநேரத்தில் கரோனா தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தொடங்கும். கரோனா தொற்றுக்கு, ஒன்பது மாதத்தில், பாதுகாப்புமிக்க மற்றும் வீரியமான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மெடிக்கல் மிராக்கிள் என கூறியுள்ள டிரம்ப், அமெரிக்க மக்கள் அனைவர்க்கும் , கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். முதியவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை தர விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பைசர் நிறுவனத்தின் இந்த தடுப்பூசிக்கு, அமெரிக்காவின் தேசிய மருத்துவ முகமை ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பினை ட்ரம்ப் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.