நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று 102 இடங்களுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி அன்று 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதி அன்று 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, சர்வதேச நாடானா அமெரிக்க அரசின் கீழ் இயங்கும், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்) என்கிற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மத சுதந்திரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இந்த ஆண்டும் மத சுதந்திரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ‘இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்திற்கான நிலையைக் கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது. இந்தப் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய அரசு தெரிவிக்கையில், இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப் அமைப்பு தலையிட முயற்சி செய்வதாக கூறி அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையை நிராகரித்தது.
இந்த நிலையில், இந்திய மக்களவைத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்யா நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார், அப்போது அவர், “எங்களிடம் உள்ள தகவல்களின்படி, காலிஸ்தான் பயங்கரவாதி ஜிஎஸ் பண்ணுன் கொலை சதியில் இந்திய குடிமக்கள் ஈடுபட்டதற்கான நம்பகமான ஆதாரங்களை வாஷிங்டன் இன்னும் வழங்கவில்லை. ஆதாரம் இல்லாத நிலையில் இந்தத் தலைப்பில் ஊகங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இந்தியாவின் தேசிய மனநிலை மற்றும் வரலாறு குறித்த புரிதல் இல்லாமல் அமெரிக்கா பேசி வருகிறது. இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது. புதுடெல்லிக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை நாம் காண்கிறோம். அவர்கள் இந்தியாவை மட்டுமல்ல, பல மாநிலங்களையும் ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டுவதை நாம் காண்கிறோம். மத சுதந்திரத்தை மீறுவதாக அமெரிக்காவின் தேசிய மனநிலை, வரலாற்றுத் தவறான புரிதலின் பிரதிபலிப்பாகும். இதன் காரணம், இந்திய பொதுத் தேர்தலை சிக்கலாக்கும் வகையில் இந்தியாவின் உள் அரசியல் சூழ்நிலையை சமநிலையில் வைக்க முயல்கிறார்கள். இது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதன் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்.