அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர், ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். ட்ரம்ப் தொடர்ந்து அதிபர் தேர்தல் முடிவுகளை விமர்சித்து வந்தார். இதற்கிடையே அமெரிக்க அதிபராக பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியபோது, நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நடந்த, இந்த வன்முறையைத் தூண்டிவிட்டதாக ட்ரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் நிறைவேறினால் ட்ரம்ப், இனி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்ற நிலையில், இந்தத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் போதுமான பெரும்பான்மை இல்லாததால் செனட்டில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவில் ஒரு மாநாட்டில் பேசிய ட்ரம்ப், மீண்டும் 2024 ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என சூசகமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "உங்கள் உதவியுடன், நாங்கள் அவையைத் திரும்பப் பெறுவோம், நாங்கள் செனட்டை வெல்வோம். பின்னர் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி, வெள்ளை மாளிகைக்கு வெற்றிகரமாக திரும்புவார். அது யார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" எனக் கூறினார். தொடர்ந்து, ஜோ பைடன் எல்லை பாதுகாப்பைக் கையாளும் விதத்தை விமர்சித்த ட்ரம்ப், "ஆனால் யாருக்குத் தெரியும்? நான் அவர்களை மூன்றாவது முறையாக தோற்கடிக்க முடிவு செய்யலாம்” எனத் தெரிவித்தார். ஏற்கனவே அதிபராக இருந்த ட்ரம்ப், 2020 தேர்தலிம் தானே வெற்றிபெற்றதாக கூறி வருகிறார். அதனடிப்படையில் ஜனநாயக கட்சியியை அவர் இரண்டு முறை தோற்கடித்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது கட்சி ஆரம்பிக்க ட்ரம்ப் ஆலோசனை நடத்திவருவதாக கூறப்பட்ட நிலையில், மூன்றாவது கட்சி ஆரம்பிக்கும் திட்டமில்லை எனக் கூறியுள்ள அவர், “நாங்கள் புதிய கட்சிகளைத் தொடங்கவில்லை. எங்களிடம் குடியரசுக் கட்சி உள்ளது. இது ஒன்றிணைந்து முன்பைவிட வலுவாக இருக்கும். நான் ஒரு புதிய கட்சியைத் தொடங்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.