Skip to main content

புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை வழங்க மறுப்பதேன்? சமூக வலைதளங்களுக்கு ஐகோர்ட் கேள்வி

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
you

 

வழக்குகள் தொடர்பாக புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை வழங்க மறுப்பதேன் என்பது குறித்து மூன்று வாரங்களில் பதிலளிக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால் சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அனைத்து சமூக வலைதளங்கள்  மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க  ஆதாரை கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி மானிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் டாக்டர் வி.வெங்கடேசன், சமூக வலைதளங்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும்போது, புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை சமூக வலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகள் வழிவகுக்கிறது என தெரிவித்தார். 

 

அவ்வாறு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், வழக்கு பதிவு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதற்கும் விதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

 

அதேபோல, சமூக வலைதளங்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிப்பதற்கு குறைதீர்ப்பாளரை அந்தந்த நிறுவனங்கள் நியமிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளதாகவும், ஆனால் அதுபோன்று நியமிக்கப்பட்டதாக தெரியவில்லை என்பதையும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவந்தார்.

                                                                             

இதையடுத்து, யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள், இந்தியாவில்  ஏன் இதுவரை குறைதீர்ப்பாளர்களை நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அந்த நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் ஏன் இந்தியாவில் அமைக்கப் படவில்லை? புலன் விசாரணை அமைப்புகள் கேட்கும் விவரங்களை தர மறுப்பது ஏன் என்பது குறித்து  மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்