'ரியோ டின்டோ' என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் சுரங்கப் பணிகள் நடைபெறும் பொழுது கிடைக்கும் கனிமத்தின் தன்மையை அளவிடுவதற்காக சிறிய அளவிலான கதிரியக்க தனிமங்கள் கொண்ட குப்பிகளை அந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
சிசியம்-137 என்ற கதிரியக்க தனிமம் உள்ள அந்த குப்பி மிகவும் ஆபத்தானது. இந்த தனிமத்தின் கதிரியக்கம் மனித மற்றும் விலங்குகளின் உடலில் நேரடியாக பட்டால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். தீக்காயங்களையும் ஏற்படுத்தும். இதனால் கேன்சர் உள்ளிட்ட ஆபத்துகள் கூட வரலாம் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
கடந்த 12 ஆம் தேதி இந்த கதிரியக்க குப்பிகள் உள்ளிட்ட சுரங்கப் பணிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு சேமிப்பு கிடங்கிற்கு ரியோ டின்டோ நிறுவனத்தின் ட்ரக்குகள் சென்றுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்வரா பகுதியிலிருந்து 1400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெர்த் நகருக்கு ட்ரக்குகள் சென்று, அங்குள்ள நிறுவனத்தின் கிடங்கில் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட பொருட்களை பிரித்துப் பார்த்தபோது அதில் வைத்திருந்த கதிரியக்க குப்பிகளில் ஒன்றை மட்டும் காணவில்லை. மிகவும் ஆபத்து என்பதால் பதற்றமடைந்த ரியோ டின்டோ நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். கோரிகுண்டு அளவிலான குப்பி என்றாலும் ஆபத்து பெரியதென்பதால் உடனடியாக இதற்காக தேடுதல் குழு அமைக்கப்பட்டு ட்ரக் சென்ற வழியில் தேடுதல் நடத்தப்பட்டது. சாலையோரத்தில் இறங்கி நவீன கருவிகளைக் கொண்டு குப்பி பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டது ஆஸ்திரேலியா.