இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்வான் உள்ளிட்ட எட்டு நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது.
ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தியது.
அதனை தொடர்ந்து ஈரானிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்வான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு இந்த ஆண்டு மே மாதம் 4-ம் தேதி வரை சலுகை அறிவித்தது. இது குறித்து இந்தியா அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னமும் ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் சலுகையை அமெரிக்கா நீட்டிக்குமா என்பது தெரிவிக்கவில்லை. இதனால், கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இன்னும் 10 நாட்களில் இது குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. சீனாவுக்கு அடுத்து ஈரானிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கும் நாடான இந்தியா, ஒரு மாதத்திற்கு 90 லட்சம் பேரல்கள் கொள்முதல் செய்வது குறிப்பிடத்தக்கது.