கரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலைப் புதைக்கவிடாமலும், மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் மனிதம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், கரோனா பாதித்த பலரை இலவசமாகத் தனது டாக்சியில் மருத்துவமனையில் சேர்த்த ஓட்டுநரை மருத்துவர்கள் கௌரவித்த சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது.
கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டில் இரண்டு லட்சத்திற்கு அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரின் வசிக்கும் டாக்சி ஓட்டுநர் ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புடையவர்களை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும், குணமடைபவர்களை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கும் கொண்டு செல்லும் சேவையை இலவசமாக மேற்கொண்டு வந்துள்ளார். அவர் தொடர்ந்து உதவி வந்த சூழலில், அண்மையில் மருத்துவமனையிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.
குணமடைந்த நபரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டதால், அந்த ஓட்டுநர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் அப்போது அவர் எதிர்பாராத வகையில், அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் அவருக்குக் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்து, அனைவரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான காசோலையையும் அவருக்கு அன்பளிப்பாக அளித்திருக்கிறார்கள். அவர்களது அன்பால் நெகிழ்ச்சியடைந்த அந்த ஓட்டுநர் கண்ணீர் மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ ஒரு கோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Medical staff lined up to applaud this taxi driver, who has been driving patients to a hospital in Madrid for free ?? pic.twitter.com/NP43XmNMaT
— DW News (@dwnews) April 21, 2020