கரோனா தடுப்பு மருந்து குறித்த தகவல்களை ரஷ்ய ஹேக்கர்கள் திருட முயல்வதாக இங்கிலாந்து குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதனை மறுத்துள்ளது ரஷ்யா.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தங்களது நாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் கரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் ரஷ்யா அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள், ரஷ்ய ஹேக்கர்கள் தங்கள் நாடுகளில் உள்ள ஆய்வகங்களைக் குறிவைத்து கரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி முடிவுகளைத் திருட முயன்றதாகக் குற்றம் சாட்டின. இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலின் போது, இங்கிலாந்து - அமெரிக்கா இடையேயான ரகசிய வியாபார தகவல்களைத் திருடி வெளியிட்டுத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ரஷ்யா முயன்றதாக இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யத் தரப்பு, இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது எனவும், நட்பற்ற செயல்பாடுகளை ரஷ்யா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், தகுந்த பதிலடி தருவதே வழக்கம் எனவும் தெரிவித்துள்ளது.