தானும் முகக்கவசம் அணியாமல் கரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிந்தவர்களையும் கேலி செய்தது முதல் கிருமி நாசினிகள் கரோனா வைரஸை அழிக்குமெனில் ஏன் நேரடியாக கிருமிநாசினியை மனிதனின் உடலுக்குள் செலுத்தி கரோனாவை குணப்படுத்த முடியாது என கேள்வி எழுப்பியது வரை அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கரோனா மீதிருக்கும் பார்வை குறித்து ஆரம்பத்திலிருந்தே குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் இருந்துவந்தது.
பக்கவிளைவுகள் உள்ள ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை கரோனாவிற்கு பரிந்துரைத்ததும், பல்வேறு விமர்சனங்களை அவர் மீது ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் முகக்கவசம் அணியாமல் கூட்டங்களில் கலந்துகொண்ட டிரம்ப் திடீரென ஒரு நாள் முகக்கவசம் அணிந்து அதிர்ச்சியூட்டினார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் இந்த நேரத்தில் தற்போது அவருக்கும் அவரது மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சட்ட விதிமுறைகளின்படி அதிபர் இல்லாமல் அரசு ஒரு நொடி கூட இயங்க முடியாது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு டொனால்ட் ட்ரம்ப் அறையில் முடங்கி இருக்கும் நிலையில் அரசை யார் நடத்துவது என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. ரகசிய படையினர் மூலம் ட்ரம்பை பாதுகாப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் அல்லது சுயநினைவை இழந்தால் அந்நாட்டின் அரசியல் சட்டம் சட்டத்திருத்தம் 25 பிரிவு 3-ஐ பயன்படுத்தி அதிபரின் அதிகாரங்களை துணை அதிபராக இருப்பவர் பெற்றுக்கொள்ளலாம். அந்த அளவிற்கு கூட அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் துணை அதிபருக்கு அதிகாரங்கள் வழங்கப்படும்.
அதிபர் குணமடைந்து முழுமையான வந்த பிறகு மீண்டும் பொறுப்புக்கு அவரிடம் ஒப்படைக்கப்படும். இதற்கு முன்பு புஷ் அதிபராக இருந்தபோது 2 முறை அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். அப்பொழுது பிரிவு 3-ஐ பயன்படுத்தி துணை அதிபரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
ஒருவேளை துணை அதிபருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டால் சட்டத்திருத்தம் 25 செல்லுபடியாகாது. அந்தச் சூழலில் பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் அதிபராக செயல்படுவார். ஆனால் தற்போது பிரதிநிதிகள் அவை சபாநாயகர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பலைகள் கிளம்பவும் வாய்ப்புள்ளது.