
கரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 06/03/2025 அன்று முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தது.
நேற்றும் (08/03/2025) சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் அமைந்துள்ள நான்கு மற்றும் ஐந்தாவது தளங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை மூன்றாவது நாளாக தொடர்ந்தது. டாஸ்மாக் மூலம் மதுபானங்களை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடைய மதுபான நிறுவன அலுவலகம் ஆயிரம் விளக்கு பகுதி மற்றும் தியாகராய நகர் பகுதியில் இருக்கிறது. அதேபோல் அவர் தொடர்புடைய பிற இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் ஏழு இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையானது இன்று நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறாம் தேதியிலிருந்து 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்க தொகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.