
திருப்பூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் 100 நாட்கள் ஆகியும் தற்பொழுது வரை விடை கிடைக்காமல் விசாரணை நீண்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் பண்ணை வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் கடந்த 29/11/2024 அன்று அதிகாலை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
வீட்டுக்கு வந்த சவரத் தொழிலாளி மூன்று பேரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவிநாசிபாளையம் போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று வரை இந்த வழக்கு சிறிதும் முன்னேற்றம் இல்லாமல் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க முதலில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தனிப்படை எண்ணிக்கைகள் 18 ஆக உயர்த்தப்பட்டும் விசாரணையில் சிறிதளவும் முன்னேற்றம் இல்லை என கூறப்படுகிறது.
இந்த வழக்கில் 'உங்களுக்கு தொடர்புள்ளது' என ஒப்புக் கொள்ளுங்கள் என காவல்துறை மிரட்டியதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் அவருடைய தோட்டத்தில் பணியாற்றிய நபர் ஒருவர் மனு அளித்திருந்தார். அதேபோல் திருப்பூர் பலவஞ்சிபாளையம், குறவன் குட்டை பகுதி மக்கள் சிலரை இந்த கொலைக்கு பொறுப்பேற்கும்படி போலீசார் வற்புறுத்தியதாகவும் அதற்கு எதிராகவும் அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால் காவல்துறை தரப்பிலோ வழக்கு தெளிவான விசாரணையில் உள்ளது. எங்களுக்கு கிடைத்த உரிய தரவுகளின் படி தான் விசாரணைக்கு அவர்களை அழைக்கிறோம் என மறுப்பு தெரிவித்தனர்.
இன்றுடன் இந்த கொலை சம்பவம் நடந்து 100 நாட்களை எட்டியுள்ளது. தற்பொழுது வரை இந்த வழக்கில் சிறு முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பது போலீஸாருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.