தாய்லாந்து மன்னரை விமர்சித்ததற்காக ஒரு மில்லியன் பயனாளர்களைக் கொண்டிருந்த பிரபல ஃபேஸ்புக் குழு முடக்கப்பட்ட விவகாரம் தற்போது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'ராயல் மார்க்கெட் பிளேஸ்' எனும் ஒரு மில்லியன் பயனாளர்களைக் கொண்டிருந்த ஃபேஸ்புக் குழு தாய்லாந்து நாட்டின் மன்னரை பற்றி விமர்சித்த காரணத்திற்காக முடக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் மன்னரை விமர்சிப்பது என்பது குற்றச்செயலாக பார்க்கப்படுகிறது. இது நிருபிக்கப்படும் பட்சத்தில் அந்நாட்டு சட்டப்படி 15 வருடம் வரை சிறையில் அடைக்கமுடியும். இந்நிலையில் கடந்த 10ம் தேதி தாய்லாந்து நாட்டின் அரசு சார்பில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மன்னரை விமர்சித்தது குறித்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் இரண்டு வார கால அவகாசத்துக்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 6300 அமெரிக்க டாலர் கணினி குற்ற வழக்கின் கீழ் அபராதமாக கட்ட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது கருத்துரிமைக்கு எதிரான ஒன்று என்றும், அபராத தொகைக்கு பயந்து ஃபேஸ்புக் கருத்துச்சுதந்திரத்தை நசுக்கும் வகையில் செயல்படுகிறது எனவும் பல்வேறு தரப்புகளில் இருந்து தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. முடக்கப்பட்ட அந்த குழுவைத் தொடங்கியவரும் அதை நிர்வகித்தவருமான பவன் இதுகுறித்து கூறும்போது, "எங்கள் குழு ஜனநாயக பூர்வமான வழியில் கருத்து சுதந்திரத்திற்கான தளமாக செயல்படக்கூடியது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் சர்வாதிகாரத்தன்மைக்கு வலு சேர்க்கக்கூடியதாக உள்ளது" என்றார்.
இந்த சர்ச்சைகள் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, தாய்லாந்து அரசு சட்டவிரோதமானது என்று ஒன்றை கருதும்போது அதை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். இது மனித உரிமைகளுக்கு எதிரானது தான். ஒவ்வொரு பயனாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அடுத்தகட்டமாக இதை சட்டப்படி எதிர்க்கொள்ள இருக்கிறோம்" என்றார்.