
இந்த ஆட்சியில் எது நடந்தாலும் அதை திசைத் திருப்புவதற்காகவே திமுக பார்ப்பதாக அதிமுகவின் காயத்ரி ரகுராம் விமர்சனம் வைத்துள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து எதை கேட்டாலும் அதை திசைத் திருப்புவதில் தான் திமுக ஆட்சி இருக்கிறது. தன்னுடைய மகனை எப்படி வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்களே தவிர இங்கிருக்கக் கூடிய மக்களுடைய பிள்ளைகளை வஞ்சிக்கிறார்கள். இதே ஜெயலலிதா இருக்கும் பொழுது இதுபோன்ற குற்றச்செயல்கள் நடந்தது என்றால் இம்மீடியேட்டாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு போலீஸ் அதிகாரியோ அல்லது மற்ற துறை சார்ந்த அரசு அதிகாரிகளோ தவறுகள் செய்தால் உடனடியாக அவர்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். அந்த பொசிஷனில் இருந்து தூக்கி விடுவார்கள். ஆனால் இன்று நம்முடைய முதல்வர் அதற்கான ஒரு விஷயத்தையே எடுக்கவில்லை. ஆனால் குற்றச்செயலில் ஈடுபடும் போலீசாருக்கு ப்ரமோஷன் தான் கிடைக்கிறது. இல்லையென்றால் இடமாற்றம் செய்கிறார்கள். இதுதான் நடக்கிறதே தவிர நடவடிக்கை எடுப்பது கிடையாது. என்னைப் பொறுத்தவரை சட்ட ஒழுங்கு பூஜ்ஜியம்; திமுக ஆட்சியும் பூஜ்ஜியம். ஆனால் மாற்றி மாற்றி அப்பாவும் மகனும் அவர்களுக்குள்ளாகவே 100 சதவீதம் மதிப்பெண் கொடுத்துக் கொள்கிறார்கள்'' என்றார்.