கரோனா அச்சம் காரணமாக ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டுவந்த லட்சக்கணக்கான மிங்க் என்ற விலங்கை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த ரோமங்களுக்காக மிங்க் விலங்கு ஐரோப்பிய மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. அண்மையில் ஸ்பெயினில் உள்ள மிங்க் பண்ணை ஒன்றில் விலங்குகளுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சுமார் ஒரு லட்சம் மிங்க்களை கொல்ல ஸ்பெயின் அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய மிங்க் தோல் உற்பத்தி நாடான டென்மார்க்கிலும், நெதர்லாந்திலும் மிங்க் பண்ணைகளில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சுமார் 10 லட்சம் மிங்க் விலங்குகளைக் கொல்ல அந்நாட்டு அரசுகள் முடிவெடுத்துள்ளன. கரோனா தொற்று வன விலங்குகளிடமும் பரவ ஆரம்பித்தால், பல அரியவகை உயிரினங்கள், கொரில்லாக்கள், சிம்பான்சிகளும் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சூழலியலாளர்கள் கணித்துள்ளனர். எனவே மற்ற விலங்குகளைக் காக்கும் பொருட்டு இந்த பண்ணை விலங்குகளை அழிப்பதாக பல நாடுகளும் முடிவெடுத்துள்ளன. இதனையடுத்து பல மேற்கத்திய நாடுகளில் கொத்துக்கொத்தாக மிங்க்கள் கொன்றுகுவிக்கப்பட்டு வருகின்றன.