கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக 'கரோனா' எனும் அந்த கொடிய வைரஸ் தோன்றியதாகவும் குறிப்பாக அங்குள்ள மாமிச உணவு சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாகவும் சொல்லப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த வைரஸ் பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்து பாதாளத்திற்கு கொண்டு சென்றதோடு, உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதற்கு எதிரான தடுப்பூசிகள், மருந்துகள் என எத்தனை வந்தாலும் தற்பொழுது வரை கரோனவுடன் வாழ பழகிக் கொண்டோம் என்பதே உண்மை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் 'கரோனா' சாதாரணமான ஒன்றாகி விட்டது.
ஆனால் கரோனாவின் பிறப்பிடம் என்று சொல்லப்படும் சீனாவில் கரோனா மீதான பயம் இன்னும் சற்றும் குறையவில்லை என்றே சொல்லலாம். அதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்துள்ளது ஒரு சம்பவம், சீனாவின் ஷாங்காய் நகரில் 6 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றுவந்த நிலையில் அவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மாலுக்கு சீல் வைத்ததோடு உள்ளே இருந்த வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ சோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்த முடிவெடுத்த நிலையில், அதனைத் தெரிந்துகொண்டு அங்கிருந்த மக்கள் 'ஆள விடுங்கடா சாமி' என முண்டியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.