ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 26ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் உள்ள அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் கூகுள் நிறுவனத் தளங்கள் மூலம் வருமானம் பெறுவதற்கு கூகுள் நிறுவனம் தடைவிதித்தது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பபெட் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. ஏற்கனவே யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்டவை தங்கள் மூலம் ரஷ்ய ஊடகங்கள் பெறும் வருமானத்திற்குத் தடைவிதித்திருந்த நிலையில் கூகுளும் இந்த முடிவை எடுத்தது. இப்படி பல நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு நெருக்கடி தந்திருக்கும் நிலையில் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக மியூசிக் நிறுவனமான சோனியும் தற்பொழுது அறிவித்துள்ளது.
அந்நாட்டு ஊடகங்களின் பெரும்பான்மை வருமானம் கூகுள் மற்றும் யூடியூப்பை நம்பியே இருக்கும் சூழலில் இந்நிறுவனங்களின் இந்த அறிவிப்புகள் அந்நாட்டு ஊடகத்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.