இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 39 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திகொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
இதனிடையே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான், சிரியா, ஈரான் போன்ற நாடுகள் உதவி செய்துவருவதாகவும், அங்கே பதுங்கிருந்து முக்கிய தலைவர்கள் ஹமாஸ் அமைப்புக்குத் தேவையான நிதி, ஆயுதம் போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் இஸ்ரேல் நம்புகிறது. இதன் காரணமாக லெபனான், சிரியா, ஈரான் நாடுகளில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் தங்கியிருப்பதாகச் சந்தேகிக்கும் இடங்களில் எல்லாம் இஸ்ரேல் ராணுவம் ஆளில்ல விமானங்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் நேற்று(31.7.2024) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது ஈரான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் இந்த கொலைக்குப் பொறுப்பேற்கவோ, மறுக்கவோ இல்லை. ஆனால் ஈரான் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்மாயில் ஹனியே கொலைக்கு இஸ்ரேல்தான் காரணம் எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த செவ்வாய் கிழமை நடந்த ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சிக்குப் பின், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினியை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, டெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியா வீட்டைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை, ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி தேசியப் பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரகால கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் இஸ்ரேல் வருத்தப்படுவார்கள் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்குமான போர் தற்போது திசைமாறி ஈரான் - இஸ்ரேல் என இரு நாடுகளுக்கு இடையேயான போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தைக் கூட்டியுள்ளது.