தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
அதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் நலம் விசாரித்த முதல்வர், "தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார். மேலும் அவர்களின் உற்சாக வரவேற்பில் மகிழ்ந்த ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு அவர் தங்கும் நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றார். இன்று சான்ஸ்பிரான்ஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்களுடன் கலந்துரையாடுவதுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றவிருக்கிறார்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், “சுறுசுறுப்பான நடைப்பயிற்சியுடன் சான்ஃபிரான்சிஸ்கோவில் இன்றைய நாளினைத் தொடங்கி, மாலை நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.