இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இனி வரும் காலங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. நேற்று பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஜபாலியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் தரைமட்டம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜபாலியாவிற்கு தஞ்சமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ‘அலிபாபா’ மற்றும் ’பைடு’ தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயரை நீக்கியுள்ளன. பைடுவின் சீன மொழியில் உள்ள வரைப்படத்தில் சர்வதேசத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்த பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் இந்த இரு நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த நிறுவனங்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன நிறுவனங்கள் அவர்களது இணைய வரைப்படத்தில் இஸ்ரேலின் பெயரை நீக்கியிருப்பது பெரும் சர்ச்சையாகி மாறியுள்ளது.