பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்குத் தடை விதிப்பதாக இந்திய அரசு சில தினங்களுக்கு முன்னால் அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்தியா, சீனா மோதலையடுத்து இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளுக்கு முதற்கட்டமாக தடை விதித்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்ததாக விளக்கமும் அளித்தது. மேலும் சில செயலிகளை தடை விதிப்பது குறித்து விவாதித்து வருவதாகவும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகள் மீதான தடை அறிவிப்பு வெளியானது. இந்தியாவின் இந்த முடிவிற்கு சீனாவின் வர்த்தக அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் காவ் ஃபெங், "இந்தியாவின் இந்த நடவடிக்கையானது சீனாவின் முதலீட்டார்கள் மற்றும் சேவை வழங்குபவர்களின் நலனுக்கு எதிராக உள்ளது. இது சட்ட மீறல். இந்தியா தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.