சீனா வெளியிட்டுள்ள புதிய தபால் தலை ஒன்று, அதன் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மேலும் தளர்வைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக மக்கள்தொகையில் சீனா முதலிடத்தில் உள்ளது. இன்றைய நிலையில் சீனாவின் மக்கள் தொகை தோராயமாக 141 கோடி ஆகும். அதிகரித்துக்கொண்டே போகும் மக்கள்தொகை நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகலாம் என நினைத்து ஒரே குழந்தை என்ற திட்டத்தை 1979-ல் சீனா அறிமுகம் செய்தது. இதனால் சீனாவின் மக்கள்தொகை உயர்வு கணிசமாக கட்டுக்குள் வந்தது.
ஆனால், வேறொரு பிரச்சினை எழுந்தது. குழந்தை பிறப்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால், மொத்த மக்கள்தொகையில் வயதுமுதிர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதைத் தவிர்க்க 2016-ல் சீன மக்கள் இரண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சலுகையை அறிவித்தது. 2017-ஆம் ஆண்டுக் கணக்குப்படி சீனாவின் மொத்த மக்கள்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டும் 16.2 சதவிகிதம்.
இந்நிலையில் 2019-ஆம் ஆண்டான பன்றி வருடத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு சிறப்புத் தபால் தலையை வெளியிட சீனா ஆயத்தமாகி வருகிறது. அந்த தபால்தலையில் இரண்டு பன்றிகள் அதன் மூன்று பன்றிக்குட்டிகளுடன் சிரித்தபடி இருக்கும் தோற்றம் இடம்பெறுகிறது.
இந்த தபால் தலைதான் அடுத்த ஆண்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மேலும் தளர்வை அனுமதிக்க சீனா முடிவெடுத்துள்ளதாக சீனர்களை யூகிக்கவைத்துள்ளது. ஆனால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஆகும் செலவு, சீனாவின் வருவாய் விகிதத்தில் ஏற்பட்ட மந்தம் ஆகியவற்றைக் கவனிக்கும் சிலர், அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை என்கின்றனர்.
ஆனாலும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள், நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்- நாம் இருவர் நமக்கு மூவர் என அரசு அறிவிப்பு வருமா என்றபடி..