உயிரியல் பூங்கா ஒன்றில் பார்வையாளர்கள் சூழ்ந்திருக்கையில், பூங்கா காவலரைக் கரடிகள் ஒன்றுசேர்ந்து கடித்துக் குதறிச் சாப்பிட்ட கொடூர சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதைப் பார்வையாளர்கள் பாதுகாப்பான வாகனங்களிலிருந்து பார்க்கும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் கடந்த சனிக்கிழமை பார்வையாளர்கள் விலங்குகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, கரடிகள் நடமாடும் பகுதியில் நுழைந்த அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. கரடிகள் வசிக்கும் பகுதியில் பார்வையாளர்களின் வாகனம் நுழைந்தபோது, அங்கிருந்த ஒரு கரடிக் கூட்டம், அப்பூங்காவில் பணியாற்றும் காவலர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளன.
இதனைக்கண்ட பார்வையாளர்கள் பயத்தில் அலறி உதவிக்காகக் கூச்சலிட்டுள்ளனர். ஆனால், உதவி கிடைப்பதற்கு முன் அந்த காவலரைக் கொன்று கரடிகள் சாப்பிட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் பதறவைத்துள்ளது. அந்த வீடியோவில், கரடிகள் கூட்டம் பூங்கா காப்பாளரைக் கொன்று சாப்பிடுவதைக் காட்டும் விதத்தில் இருக்கிறது. இந்த கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து பூங்காவின் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.