பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு வாக்களித்துள்ள மக்கள் ஒவ்வொருவரின் வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவெடுக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்காக உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளதால் நீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன்கிழமை அறிவித்தார். அதன்படி தேர்தல் வெற்றிக்கு மிகமுக்கியமான மற்றும் இழுபறியில் இருக்கக்கூடிய மாகாணங்களான மிச்சிகன், ஜார்ஜியா, பென்சில்வேனியா, நெவேடா ஆகிய மாகாண நீதிமன்றங்களில் ட்ரம்ப் சார்பாக, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இதில் மிச்சிகன் மற்றும் ஜார்ஜியா நீதிமன்றங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது. மொத்தமுள்ள 538 சபை வாக்குகளில் 270 வாக்குகளை பெரும் நபரே அதிபராவார் என்ற சூழலில், பைடன் 264 சபை வாக்குகளையும், டிரம்ப் 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதில் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி ஆர்வம் காட்டிவரும் சூழலில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், "பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அளவில் அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களின் ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டியவை. ஜோ பைடன் சொல்வது தான் சரி, நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், நாம் தான் வெற்றி பெறப் போகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.