சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு இன்று உலகையே அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது கரோனா வைரஸ். ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் இவ்வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சீனாவில் பரிசோதனையில் இருக்கும் மூன்று தடுப்பூசிகள் நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் தொடக்கத்திலோ மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தலைமை ஆரய்ச்சியாளர் கூறும் போது, “சோதனையில் இருக்கும் கரோனா தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதமே எனக்குப் போடப்பட்டது .எந்தவொரு பக்கவிளைவுகளும் எனக்கு ஏற்படவில்லை" என்றார்.
சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இது குறித்து வெளியிட்ட தகவலில், "நான்கு தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. அவற்றில் மூன்று தடுப்பூசிகள் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது" என அதில் கூறப்பட்டுள்ளது.
அத்தடுப்பூசியின் பெயர் மற்றும் அது குறித்தான முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.