உலகம் முழுவதும் பிரபலமான ஊடகமான பிபிசி சமீபத்தில், சீனாவில் சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் 'உய்குர்' இன முஸ்லிம்கள் அந்த நாட்டால் துன்புறுத்தப்படுவது குறித்தும், கரோனா தொற்றை அந்தநாடு கையாண்டவிதம் குறித்தும் செய்தி வெளியிட்டது. இதற்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்தநிலையில் சீனா, பிபிசி ஊடகத்திற்குத் தங்கள் நாட்டில் தடை விதித்துள்ளது. இந்த தடை தொடர்பாக சீனா, "தங்கள் நாட்டைப் பற்றிய பிபிசி வேர்ல்ட் நியூஸ் அறிக்கைகள், உண்மையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் மற்றும் சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது உள்ளிட்ட ஒளிபரப்பு வழிகாட்டுதல்களை மீறுவதாக கண்டறியப்பட்டது" எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து பிபிசி நிறுவனம், சீன ஆணையங்கள் இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததில் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். பிபிசி உலகின் மிகவும் நம்பகமான சர்வதேச செய்தி ஒளிபரப்பு நிறுவனம். மேலும் பிபிசி, உலகைச் சுற்றி நடக்கும் செய்திகளை நியாயமாக, பாரபட்சமின்றி, பயம் மற்றும் சார்பின்றி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
சீனா பிபிசிக்கு தடை விதித்துள்ளதற்கு இங்கிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது. பிபிசி மீதான தடை ஏற்றுக்கொள்ள முடியாததென்றும், ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை எனவும் இங்கிலாந்து கூறியுள்ளது.