அமெரிக்காவில் தொற்றுநோய் தடுப்பு குழுவில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த செலின், தனது ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ள ஜாதிப்பெயர் குறித்து விளக்கமளித்துள்ளார்.
குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன், தற்போது அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய அதிபரான ஜோ பைடன் அமெரிக்க நாட்டில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு குழு அமைத்துள்ளார். அந்தக் குழுவின் உறுப்பினராக அதிபரால் நியமிக்கப்பட்டவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த செலின் ராணி.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அந்நாட்டுக்கு 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார் ஜோ பைடன். அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில், 3 பேர் உள்ளார்கள். அதில் ஏற்கனவே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், இந்த குழுவின் உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவரான செலின் ராணி, நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், செலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜாதிப்பெயரைப் போட்டுள்ளது குறித்து தமிழர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "எனது அப்பா 1970களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். நடராஜ் என அமெரிக்கர்கள் அழைக்க சிரமப்பட்டபோது, கவுண்டர் என்பது அவர்களுக்கு உச்சரிக்க எளிதாக இருந்தது. நான் பிறப்பதற்கு முன்பு 1970 களின் முற்பகுதியில் எனது தந்தை தனது பெயரை கவுண்டர் என்று மாற்றினார். அதில் சில வேதனைகள் இருந்தாலும், அது எனது வரலாறு மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். நான் திருமணம் செய்துகொண்டபோது எனது பெயரை மாற்றவில்லை. நான் இப்போது அதை மாற்றப்போவதில்லை. அது என் அடையாளம், வரலாறு” என்று பதில் அளித்துள்ளார். அவரது இந்த பதிலை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் ட்விட்டரில் கருத்திட்டு வருகிறார்கள்.