முழுநீள பர்தா மற்றும் முகத்திரை அணிந்துகொள்வது பெண்களின் விருப்பத்திற்குபட்டது என சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கான பல சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பெண்கள் கார் ஓட்டலாம், விளையாட்டு மைதானத்திற்குச் சென்று கண்டுகளிக்கலாம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை இவர் வெளியிட்ட போது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றன.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த முகமது பின் சல்மான், இஸ்லாமிய கோட்பாடுகளில், பெண்கள் ஆண்களுக்கு நிகரான கண்ணியமான உடை அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, முழுநீள பர்தாக்களை அணியவேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. பர்தாக்களோ, முகத்திரையோ அணிவது பெண்களின் சொந்த விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பர்தா அணிவதற்கு விலக்களித்து சவுதி அரேபியா எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.