Skip to main content

11 லட்சத்துக்கு விளையாடிய சிறுவன்: திருப்பித் தரமுடியாதென ஆப்பிள் கைவிரிப்பு!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

game

 

அம்மாவின் ஆப்பிள் ஐ-பேடில், அம்மாவின் கவனத்துக்கு வராமல், மொபைல் கேம் ஆடிய சிறுவன், விளையாட்டுக்கான பூஸ்டர் பேக்குகளுக்காக, 11 லட்சம் செலவிட்டுத் தனது தாயை அதிர வைத்துள்ளான். ஆனால், தாயும் சிறுவனும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் ஒரே ஆறுதல்.

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா ஜான்சன். இவரது கடன் அட்டைக் கணக்கிலிருந்து திடீரென 16,000 டாலர் செலவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வரவே ஜெஸ்ஸிகா அதிர்ச்சியடைந்தார். வங்கி அதிகாரிகளை அணுகி, தனது கணக்கு ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்டு 16,000 டாலர் வரை எடுக்கப்பட்டிருப்பதாக புகாரளித்தார். அவரது கணக்கை ஆய்வுசெய்த வங்கி அதிகாரிகள் அப்படியெதுவும் நடக்கவில்லையென்றும், சோனிக் ஃபோர்சஸ் என்ற கேமுக்கான பூஸ்டர்களுக்குத்தான் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

 

பின் ஜெஸ்ஸிகாவின் மகன் ஜார்ஜ்தான் இந்த விளையாட்டை ஆடியுள்ளான் எனவும், ஒவ்வொரு படிநிலைக்கும் பூஸ்டர்களைப் பெறுவதற்காக கொஞ்சம் கொஞ்சமாகச் செலவிட்ட தொகைதான் அது எனவும் தெரியவந்தது. இதையடுத்து, ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்புகொண்ட ஜெஸ்ஸிகா, சிறுவன் என்பதால் தெரியாமல் நடந்துவிட்டதெனவும் பணத்தைத் திரும்பத் தரவும் கோரிக்கை வைத்தார். ஆனால், பணம் செலவழிக்கப்பட்டு 60 நாட்கள் கடந்துவிட்டதால், அப்படிச் செய்யமுடியாதெனவும், சிறுவர்கள் இதுபோன்ற விளையாட்டில் பணம் செலவிடாமலிருக்கவும், வேண்டாத வலைப்பக்கங்களுக்குச் செல்லாமலிருக்கவும் பாதுகாப்பு அம்சங்கள் உண்டு. ஜெஸ்ஸிகாதான் அதைப் பயன்படுத்தத் தவறிவிட்டார் எனவும் விளக்கமளித்துள்ளது.

 

பிள்ளைகளிடம் செல்ஃபோனைக் கொடுத்து கொஞ்சும் பெற்றோரா நீங்கள்? எதற்கும் கொஞ்சம் உஷாராகவே இருங்கள்!

 

 

 

சார்ந்த செய்திகள்