உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்திலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து மக்கள் 2024ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக்கப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் அங்குக் கூடியிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து வண்ணமயமான, பிரமாண்ட வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மேலும் கேக் வெட்டி, ஆட்டம், பாட்டம் எனப் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகச் சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இன்று (31.12.2024) மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்படும் சாலைகள், மூடப்படும் மேம்பாலங்கள் ஆகியவற்றின் விவரங்களைச் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அதோடு மெரினா, எலியட்ஸ் ஆகிய கடற்கரைக்கு வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்த கூடிய இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.