அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து விநியோகிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி சோதனை நடைபெற்று வருகின்றது. 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்குழு கண்டறிந்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து இன்னும் மனிதர்கள் மீது சோதிக்கப்படாத நிலையில், விரைவில் இதன் முதற்கட்ட சோதனைகள் தொடங்க உள்ளன. இந்த சூழலில், இந்த தடுப்பூசியை இந்தியாவில் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதலை பெற்றபின், அதன் அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும், பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கும் பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியுடன் உரிம ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி 100 கோடி தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.