இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு மலேசியா பெரிய நாடு இல்லை என மலேசிய பிரதமர் மஹாதீர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம், சிஏஏ ஆகியவற்றிற்காக இந்திய மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார் மலேசியா பிரதமர் மஹாதீர். சிஏஏ குறித்து பேசியிருந்த அவர், "மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை மலேசியாவில் மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுவர். மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம்" என தெரிவித்தார்.
இதையடுத்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியது. மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதியில் இந்தியா மிகமுக்கிய பங்காற்றி வந்தது. இந்த நிலையில், இந்தியா தனது இறக்குமதியை நிறுத்தியதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. இது தொடர்பாக லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த மஹாதீர்,"இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு மலேசியா பெரிய நாடு இல்லை. இதனை சரி செய்யவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது" என தெரிவித்தார்.