உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்கள் மூலம் பரவும் இந்த ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான் இந்த கரோனா என கூறப்படுகிறது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ளது இந்த கொரோனா வைரஸ். இதுவரை இந்த வைரஸால் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 550க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வைரஸ்கள் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் வீ ஜி நகரில் உள்ள பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், கடல் உணவுகள் விற்பனை நிலையங்கள், கோழிகள், பாம்புகள், வவ்வால்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை விற்பனை செய்யும் இடங்களில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதன் மூலம் கரோனா வைரஸ், பாம்புகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்பதற்கான அதிகமான சான்றுகள் கிடைத்துள்ளன என்றும், பாம்புகளின் உடலில் இருக்கும் செல்களும், இந்த வைரஸில் உள்ள செல்களுக்கும் அதிகமான ஒற்றுமை இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வைரஸ் பாம்பின் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.