வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகியதோடு, நேற்று ஹெலிகாப்டர் மூலம் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் முன்னணி நடிகரான சாண்டோ கானையும் அவரது தந்தை செலிம் கானையும் ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செலின் கான் ஷேக் ஹசீனாவின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வரலாற்றை படமாக எடுத்துள்ளார். அந்த திரைப்படத்தில் தன்னுடைய மகன் சாண்டோ கானை நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தநிலையில் சாண்டோ கானும் அவருடைய தந்தை செலின் கானும் சந்த்பூர் என்னும் இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்ற பொழுது, பலியா யூனியனில் உள்ள ஃபராக்காபாத் பகுதியில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.